தீபாவளியின் போது ரூ.1,000 கோடி முடக்கம்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் பட்டாசு விற்பனை நஷ்டத்தை ஈடு செய்யுமா?; உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பு
சிவகாசியில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகாமல் முடங்கி இருந்த நிலையில் அடுத்து வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் விற்பனையாகி நஷ்டத்தை ஈடு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பில் பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் உள்ளனர்.
ரூ.3,000 கோடி பட்டாசு
விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த பட்டாசு ஆலைகளில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்கள் என மொத்தம் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரம் தொடங்கிய கொரோனா பாதிப்பு ஆகஸ்டு மாதம் வரை நீடித்தது. இதனால் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் மட்டும் தயாரிக்கப்பட்டது.
திடீர் தடை
இந்தநிலையில் கொரோனாவை காரணம் காட்டி ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சண்டிகர், மேற்கு வங்காளம் ஆகிய பகுதியில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அந்தந்த மாநில அரசுகள் திடீர் தடை விதித்தது.
இதனால் சிவகாசியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரூ.1,000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகாமல் முடங்கி விட்டது. இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களும், வெளிமாநில விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பட்டாசு வெடிக்க ஆர்வம்
இந்தநிலையில் இன்னும் ஒரு வாரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையும், அடுத்த வாரத்தில் புத்தாண்டும் வர உள்ளநிலையில் இந்த 2 திருவிழாவுக்கும் மக்கள் பட்டாசு வெடிக்க ஆர்வம்காட்டுவர்.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க அனுமதியும் கிடைத்துள்ளது. தற்போது பல்வேறு பகுதியில் முடங்கி உள்ள ரூ.1,000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகும் என்ற எதிர்ப்பார்ப்பு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் வழக்கமான பட்டாசு விற்பனையானால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு சரி செய்யப்படும் என்று கூறப்படும். அவர்களின் நஷ்டம் ஈடு செய்யும் என்று தெரிகிறது.
வரவேற்பு
இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர் ஜி.டி.பி.ஆர்.கணேசன் கூறியதாவது:-
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு திருவிழாக்களின் போது பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். கடந்த தீபாவளியின் போது விற்பனையாகாமல் உள்ள பட்டாசுகள் இந்த 2 திருவிழாக்களின்போது விற்பனையாகும் என்ற எதிர்ப்பு உள்ளது. பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி உள்ளது மிகுந்த வரவேற்கதக்க விஷயம். பட்டாசு உற்பத்தியாளர்களிடம் இருந்து நாங்கள் பெற்ற பட்டாசுகளுக்கு ஜனவரி மாதம் கடைசி வாரம் உரிய பணம் செலுத்த வேண்டும்.
அதற்குள் இருக்கின்ற பட்டாசுகளை விற்பனை செய்து விட்டு அடுத்த ஆண்டு தேவைக்கான ஆர்டர்களை கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே குறைந்த அளவில் தான் பட்டாசு கொள்முதல் செய்யப்பட்டது. அதில் 30 சதவீதம் பட்டாசுகள் விற்பனையாகாமல் உள்ளது. புத்தாண்டை அனைத்து மதத்தினரும் கொண்டாடுவார்கள் என்பதால் தற்போது தேங்கி உள்ள பட்டாசுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.