திருச்சியில் வக்கீலை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது

திருச்சியில் வக்கீலை வெட்டிக்கொலை செய்ய முயன்ற வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-17 01:37 GMT
திருச்சி, 

திருச்சி அருகே உள்ள அல்லித்துறையை சேர்ந்தவர் வக்கீல் சந்தர் (வயது 35). இவர், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பாளராகவும் பொறுப்பில் உள்ளார். நேற்று முன்தினம் திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் அருகே சந்தர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், சந்தரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

5 பேர் கைது

மேலும் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வக்கீல் சந்தரை வெட்டி கொல்ல முயன்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இந்தநிலையில் வக்கீல் சந்தரை அரிவாளால் வெட்டியதாக உறையூர் ராமலிங்கநகரைச் சேர்ந்த திலீபன் (35), உறையூர் தெற்கு முத்துராஜா தெருவைச் சேர்ந்த வாசுதேவன் என்கிற வினோத் (20), புண்ணியமூர்த்தி (21), ஆறுமுகம் (38), உறையூர் ராமலிங்கநகரைச் சேர்ந்த தனபால் (35) உள்ளிட்ட 5 பேரை பிடித்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பாளர் வக்கீல் சந்தரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி அந்த சங்கத்தின் சார்பில் திருச்சி பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தளவாய் ராஜேஷ் தலைமையில் போராட்டம் நடந்தது. அதுபோல் தொட்டியம் வாணப்பட்டறை கார்னரில் திருச்சி வடக்கு மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்