பயோ மெட்ரிக் முறையில் குப்பைகளை கையாளும் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் பயோ மெட்ரிக் முறையில் குப்பைகளை கையாளும் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பயோ மெட்ரிக் எந்திரம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி. 12 குக்கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் தினமும் 2 டன் எடை கொண்ட குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய குப்பைகளை பாதுகாப்பாக கையாண்டு அவற்றை எரித்து அதற்கான புகையை நச்சுதன்மையற்றதாக மாற்றம் செய்து வெளியேற்றம் செய்திடும் வகையில் இந்த ஊராட்சிக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பயோ மெட்ரிக் எந்திரம் அமைக்கும் திட்டத்திற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இந்தநிலையில் புதுகும்மிடிப்பூண்டியில் ஆள்நடமாட்டம் இல்லாத பெருமாஞ்சேரி என்ற இடத்தில் உள்ள வண்டி பாதையில் இத்தகைய திட்டத்தை செயல்படுத்திட ஊராட்சி நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யபட்டது.
முற்றுகை போராட்டம்
இதையடுத்து நேற்று அந்த பகுதியில் கூடிய கிராம மக்கள் சிலர், குப்பைகளை பயோ மெட்ரிக் எந்திரம் மூலம் எரிக்கும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரிகரையோரம் இந்த திட்டம் அமைக்கப்பட்டால் நீர் ஆதாரத்தில் மாசு ஏற்படும் என்பது உள்பட பல்வேறு புகார்களை அவர்கள் தெரிவித்தனர்.
குப்பைகளை கையாளும் இந்த திட்டம் மிகவும் அவசியமானது மட்டுமன்றி அரசால் உரிய அனுமதியுடன் நிறுவப்படுவதால் பாதுகாப்பானது என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் விளக்கி கூறப்பட்டது.
இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கவில்லை. இந்த திட்டத்தை இந்த பகுதியில் செயல்படுத்த கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் கிராம நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்ததை நடத்திய நிலையில் தாசில்தார் மூலம் விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தங்களது ஒரு மணி நேர முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.