4 நாட்கள் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 47 ஆயிரத்து 740 பேர் விண்ணப்பம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 47 ஆயிரத்து 740 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை,
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 48 ஆயிரத்து 773 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 61 ஆயிரத்து 231 பெண் வாக்காளர்களும், 64 மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரத்து 68 வாக்காளர்கள் உள்ளனர். அதன்பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள பணிகள் நடைபெற்றது. மேலும் கடந்த நவம்பர் மாதம் 21, 22-ந் தேதிகளிலும், கடந்த 12, 13-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இதில் இளம் வாக்காளர்கள் பலர் ஆர்வமுடன் வந்து விண்ணப்பித்தனர்.
47,740 பேர் விண்ணப்பம்
இந்தநிலையில் மாவட்டத்தில் 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மொத்தம் 47 ஆயிரத்து 740 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக கந்தர்வகோட்டையில் 7 ஆயிரத்து 280 பேரும், விராலிமலையில் 10 ஆயிரத்து 577 பேரும், புதுக்கோட்டையில் 8 ஆயிரத்து 195 பேரும், திருமயத்தில் 7 ஆயிரத்து 21 பேரும், ஆலங்குடியில் 6 ஆயிரத்து 781 பேரும், அறந்தாங்கியில் 7 ஆயிரத்து 886 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இதேபோல பெயர்களை நீக்கம் செய்ய 6 ஆயிரத்து 574 பேரும், வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள 5 ஆயிரத்து 843 பேரும், ஒரே தொகுதியில் இடம் மாறியுள்ள வாக்காளர்கள் 2 ஆயிரத்து 854 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த சிறப்பு முகாம்களில் 4 படிவங்களுக்கும் மொத்தம் 63 ஆயிரத்து 11 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
இறுதி வாக்காளர் பட்டியல்
இதற்கிடையில் சிறப்பு முகாம்கள் தவிர மற்ற நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப படிவம் பெறும் கடைசி தேதி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின் மாவட்டம் முழுவதும் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பித்தவர்களின் படிவங்களை தொகுதி வாரியாக கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்பின் தான் முழு விவரம் தெரியவரும் என கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் தெரிவித்தனர். 2021-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.