திருத்தணி அருகே ரெயில்வே வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்த ஆசிரியர் தற்கொலை

திருத்தணி அருகே ரெயில்வே வேலைக் காக பணத்தை கொடுத்து ஏமாந்த தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2020-12-17 00:15 GMT
சிவகுமார்
ரெயில்வேயில் வேலை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சத்தரஞ்ச ஜெயபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். (வயது 42). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணத்தை அடுத்த மோசூர் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ் (45) என்பவர் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. 

அதன் பிறகு புஷ்பராஜ் ரெயில்வே வேலை கண்டிப்பாக கிடைக்கும் நீ மேலும் 4 பேரை சேர்த்தால் இலவசமாக வேலை கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய சிவகுமார் மேலும் 4 பேரை ரூ.11 லட்சம் கொடுத்து அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நாட்கள் பல சென்றாலும் சிவகுமாருக்கு ரெயில்வேயில் வேலை கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் பலமுறை புஷ்பராஜை சந்தித்து வேலை வாங்கி கொடுங்கள் அல்லது கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் புஷ்பராஜ் இது குறித்து கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தற்கொலை
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சிவகுமார் திணறினார். இந்த நிலையில் மனவேதனையுடன் காணப்பட்ட சிவகுமார் தான் தற்கொலை செய்து கொள்வது குறித்து செல்போனில் வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட சிவகுமாருக்கு நதியா (35) என்ற மனைவியும், சுஷ்மிதா என்ற மகளும், ஸ்ரீதேசன் என்ற மகனும் உள்ளனர்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்