மதுபானக் கடைகளில் கலால்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
மதுபானக் கடைகளில் கலால்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இந்த கூடுதல் வரி அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை விட மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கலால் துறைக்கு தொடர்ந்து புகார் வந்தது. அதையடுத்து மதுபாட்டில்களில் உயர்த்தப்பட்ட விலையை அச்சிட வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில் புதுவை கலால்துறை துணை ஆணையர் சஷ்வத் சவுரப் நேற்று திடீரென மதுபான கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது கடைகளில் அரசு அறிவித்தபடி மதுபானங்களில் விலைபட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா? மதுபானங்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? விலை அச்சிடப்பட்டுள்ளதா? மதுபானங்களுக்கு உரிய ரசீது வழங்கப்படுகிறதா? காலாவதியான மதுபானங்கள் விற்பனை செய்யப் படுகிறதா? ஹாலோகிராம் ஸ்டிக்கர் போலியா? மற்றும் கடை ஊழியர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா? கிருமி நாசினி வழங்கப்படுகிறதா? என சோதனை நடத்தினார்.
மேலும் கலால்துறை அதிகாரிகள் தலைமையில் 2 தனிப்படையினரும் இந்த சோதனையில் ஈடுபட்டனர். புதுவை நகர் மற்றும் கிராம புறங்களில் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.