கர்நாடகாவில் இருந்து வாகனத்தில் ஏற்றி வந்தபோது, மதுரவாயல் மேம்பாலத்தின் அடியில் சிக்கிய டிரான்ஸ்பார்மர்; மீட்பு பணியின்போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கர்நாடகாவில் இருந்து வாகனத்தில் ஏற்றி வந்த டிரான்ஸ்பார்மர் மதுரவாயல் மேம்பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. அதை மீட்கும் பணியின்போது டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-12-16 23:47 GMT
மதுரவாயல் மேம்பாலத்தின் அடியில் சிக்கிய டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்த காட்சி
டிரான்ஸ்பார்மர் பழுது
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தது. அதனை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுது செய்யப்படும் கம்பெனிக்கு எடுத்து வர முடிவு செய்தனர்.

இதற்காக 15 நாட்களுக்கு முன்பு 66 சக்கரங்களை கொண்ட கன்டெய்னரில் டிரான்ஸ்பார்மரை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்தனர். நேற்று காலை 8 மணி அளவில் அந்த வாகனம் அம்பத்தூர் சூரப்பட்டு வழியாக தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் பிள்ளைப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

மேம்பாலத்தில் சிக்கிக்கொண்டது
மதுரவாயல் மேம்பாலத்துக்கு அடியில் சென்றபோது, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதி உரசியது. தொடர்ந்து வாகனத்தை முன்னோக்கி எடுத்தபோது மேம்பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டது. மேற்கொண்டு முன்னோக்கி நகர முடியாமலும், பின்னோக்கி வர முடியாமலும் பாலத்துக்கு அடியில் நடுரோட்டில் வாகனம் நின்றுவிட்டது.

காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார், அந்த பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தனர்.

தீப்பிடித்து எரிந்தது
பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வாகனத்தின் சக்கரங்களில் உள்ள காற்றை இறக்கிவிட்டு எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. 

இதனால் வாகனத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரின் மேல்பாகத்தை வெல்டிங் வைத்து வெட்டி எடுக்க முயற்சி செய்தனர்.

இதற்காக டிரான்ஸ்பார்மரின் மேல்பாகத்தை வெல்டிங் வைத்து வெட்டி எடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பணிகள் முடியும் தருவாயில் திடீரென வெல்டிங் எந்திரத்தில் இருந்து பறந்து வந்த தீப்பொறிகள் டிரான்ஸ்பார்மருக்குள் விழுந்தது.

அதன் உள்ளே ஆயில் படிந்த தாமிரம் மற்றும் அட்டைகள் இருப்பதால் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்து கீழே இறங்கினர். 

டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
உடனடியாக மாற்று வாகனத்தை கொண்டுவந்து பாலத்தின் கீழ் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தினார்கள். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மதியம் 1 மணி அளவில் டிரான்ஸ்பார்மர் எரிந்த நிலையிலேயே அங்கிருந்து அப்புறப்படுத்தி பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் கொண்டு வந்து வாகனத்தை நிறுத்தினர். அந்த பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பொதுமக்கள் யாரும் அருகில் செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன் மற்றும் கோயம்பேடு தீயணைப்பு அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் கோயம்பேடு, மதுரவாயல், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீ மீது நுரை கலவையை தெளித்து தீயை அணைத்தனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டாலும் டிரான்ஸ்பார்மரின் உள்ளே இருந்து புகை வந்து கொண்டிருந்ததால் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அதன்பிறகு அந்த வழியில் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அபராதம் வசூல்
உரிய அனுமதி இல்லாமல் இந்த வழியாக இந்த கனரக வாகனம் வந்துள்ளது. சாலையில் இருந்து மேம்பாலம் 6 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் டிரான்ஸ்பார்மருடன் அந்த வாகனம் 6.1 மீட்டர் உயரம் இருந்ததால் மேம்பாலத்தின் கீழ் சிக்கி கொண்டது. இதில் மேம்பாலத்தின் கீழ்பகுதியும், சாலையிலும் லேசான சேதம் அடைந்து உள்ளது. இதற்கான அபராத தொகை இந்த வாகனத்தை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்திடம் வசூலிக்கப்படும். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்