டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில், 3-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில், 3-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் தனியார் ஜவுளிக்கடையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை.
பெரம்பலூர்,
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, அனைத்து தொழிற்சங்கங்கள், அனைத்து கட்சிகள், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் மாணவர், இளைஞர் மன்றம், மாதர் சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த 14-ந் தேதி தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்த காத்திருப்பு போராட்டம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தி.மு.க.வினர், தோழமை கட்சியினருடன் கலந்து கொண்டனர். மாலையில் காத்திருப்பு போராட்டம் முடிவடைந்தது. முன்னதாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவன ஜவுளிக்கடையை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.