உடன்குடி பகுதியில் அனல்மின் நிலைய ஊழியர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா
உடன்குடி அனல்மின் நிலைய ஊழியர்கள் உள்பட 6 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
குலசேகரன்பட்டினம்,
உடன்குடி கல்லாமொழி பகுதியில் அனல்மின்நிலையம், துறைமுகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று தாக்கம் தீவிரமாக இருந்த போது ஏராளமான வடமாநில ஊழியர்கள் தங்கள் சொந்த பகுதிக்கு திரும்பினர்.
தற்போது மத்திய, மாநில அரசுகள் கடும் ஊரடங்குக்கில் தளர்வுகள் அளித்ததையடுத்து மீண்டும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அனல்மின்நிலையவளாகத்தில் பணியாற்றும் 37, 55, 42, 32, 45வயது வடமாநில தொழிலாளர்கள், சுந்தரபுரத்தைச் சேர்ந்த 72வயது முதியவர் உள்ளிட்ட 6பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமையில் சுகாதாரத்துறையினர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அனல் மின் நிலைய வளாகத்தில் தங்கி பணியாற்றி வரும் அனைத்து வடமாநில தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.