தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெங்களூருவில் பேரணி - மந்திரிகள் நேரில் வந்து கோரிக்கை மனுவை பெற்றனர்

நிதி உதவி வழங்க கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெங்களூருவில் நேற்று பேரணி நடத்தினர். மந்திரிகள் நேரில் வந்து அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றனர்.

Update: 2020-12-16 22:12 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சரியான முறையில் சம்பளம் வழங்கப்படவில்லை.

ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு கற்பித்தல் பணியை தனியார் பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் பெற்றோர் சரியான முறையில் கல்வி கட்டணத்தை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகங்கள் சரியான முறையில் சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். அந்த ஆசிரியர்கள் பலர் வேறு கூலித்தொழில் செய்வதாகவும், காய்கறி விற்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், பெங்களூருவில் நேற்று பேரணி நடத்தினர். அவர்கள் பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் ஒன்றுகூடி, அங்கிருந்து பேரணியாக சுதந்திர பூங்காவிற்கு சென்றனர். அங்கு அனைவரும் போராட்டம் நடத்தினர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அங்கேயே அமர்ந்து பகல்-இரவாக போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அந்த ஆசிரியர்கள் கூறியதாவது.

பள்ளிகள் திறக்கப்படாததால் நாங்கள் சம்பளம் கிடைக்காமல் தவிக்கிறோம். ஆன்லைன் கல்வியை நடத்தினால் அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆன்-லைன் கல்வியால் குழந்தைகளின் கண் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். பெற்றோர் கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை. இதனால் ஆசிரியர்கள் பலர் கூலிவேலை, காய்கறி விற்பது, ஆட்டோக்களை ஓட்டுவது போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் கல்வி கட்டணம் வசூலிப்பது, குழந்தைகளை சேர்ப்பது போன்ற விஷயங்களில் அரசு ஒரு தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். வாழ்க்கையை நடத்தவே நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம். இதனால் எங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். அரசு எங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். பள்ளிகளை விரைவாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

ஏற்கனவே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி எடியூரப்பாவின் உத்தரவின் பேரில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் சுதந்திர பூங்காவிற்கு வந்து, ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து மந்திரிகள் கோரிக்கை மனுவை பெற்றனர். அப்போது மந்திரி ஆர்.அசோக் பேசியதாவது.

பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள். இது அரசுக்கு தெரியும். ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி எடியூரப்பா எங்களை செல்போனில் அழைத்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு சென்று கோரிக்கை மனுவை பெற்று வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன் பேரில் நாங்கள் இங்கு வந்து ஆசிரியர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டுள்ளோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசித்து முடிவு எடுப்பார். இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

ஆசிரியர்களின் இன்றைய மோசமான நிலைமையை விளக்கும் வகையில் பேரணியில், தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்வது போல ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இது அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. விவசாயிகள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஆசிரியர்கள் பிரமாண்ட போராட்டத்தை நடத்தியுள்ளனர். பெங்களூருவில் அடுத்தடுத்து நடைபெறும் பிரமாண்ட போராட்டங்களால் கர்நாடக அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

மேலும் செய்திகள்