மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது.
நெல்லை,
வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்தது. அதன் பிறகு புரெவி புயலையொட்டி இரண்டு நாட்கள் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன் பிறகு கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழையும் லேசான மழையும் பெய்தன. நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் இருந்து மதியம் 3 மணி வரை வெயில் அடித்தது. அதன் பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.பின்னர் 4 மணி அளவில் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து 4.45 மணி வரை மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. இந்த மழையால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகள் சேறும் சகதியுமாக காணப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. சில இடங்களில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றும், நேற்று முன்தினமும் மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி முழுக்கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 140.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1263 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.156 அடி முழுக்கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 148.95 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம்105.50 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 25 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 27.50 அடியாகவும், கடனாநதி நீர்மட்டம் 83.50 அடியாகவும், ராமநதியின் நீர்மட்டம் 79 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.76 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 89.25 அடியாகவும் உள்ளன. 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டியதாலா மறுகால் பாய்கின்றது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு மில்லிமீட்டர் வருமாறு:-
பாபநாசம்-37, சேர்வலாறு-33, மணிமுத்தாறு-30, நம்பியாறு-7, கொடுமுடியாறு-10, அம்பாசமுத்திரம்-23, சேரன்மாதேவி 29, நாங்குநேரி-6, பாளையங்கோட்டை -16, நெல்லை-10, தென்காசி-3, கருப்பாநதி-16, கடனாநதி-5 ராமநதி-5, ஆய்க்குடி-7, சங்கரன்கோவில் -8, செங்கோட்டை-2, சிவகிரி-17, குண்டாறு-7.