8 ஆயிரம் தேவார பாடல்களை பாடிய உடுமலை மாணவி - இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்
உடுமலையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி 8 ஆயிரம் தேவார பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
போடிப்பட்டி,
சிவபெருமான் மீது பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலேயே பாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதிகமும் 10 முதல் 11 பாடல்களை கொண்டது. இதில் திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகங்கள் முதல் 3 திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் இயற்றிய பதிகங்கள் அடுத்த 3 திருமுறைகளாகவும், நம்பியாரூரர் எனப்படும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய பதிகங்கள் 7-ம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டுள்ளது. மண் சுமந்த பாடல்கள் என்று கூறப்படும் இந்த தேவாரப்பாடல்களை உடுமலையை சேர்ந்த ஆசிரிய தம்பதி பாலகிருஷ்ணன்-கண்ணம்மாள் ஆகியோரின் மகளான பிளஸ்-2 மாணவி உமாநந்தினி இனிமையான ராகத்துடன் 239 நாட்கள் பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இது குறித்து மாணவி உமாநந்தினி கூறியதாவது:-
தேவாரப்பதிகங்களில் நோய் நீக்கும் அருமருந்தாகும் பாடல்கள் பல உள்ளது. கொடுந்தொற்றான கொரோனா உலக மக்களையெல்லாம் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில் நோய் தீர்க்கும் பதிகங்களை பாடி அது மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என்ற முயற்சியாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தேவாரப்பாடல்களை பாடத் தொடங்கினேன்.
கடந்த 1-ந் தேதியுடன் (டிசம்பர் 1) தேவாரத்தில் 795 பதிகங்களிலுள்ள 8,239 பாடல்களையும் பாடி பதிவிட்டேன். இந்த சாதனையை 239 நாட்களில் நிகழ்த்தினேன். இதனை தொடர்ந்து தற்போது எட்டாம் திருமுறையான திருவாசக பாடல்களை பாடி பதிவிட தொடங்கியுள்ளேன். 188 நாட்களில் 6,620 தேவாரப்பாடல்களை பாடிய போதே இந்திய சாதனைப் புத்தகம் (இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு) அங்கீகரித்துள்ளது. அதன்படி “இளம் வயதில் அதிகமான ஆன்மிகப் பாடல்களை பாடியவர்’ என்ற சாதனை விருதை எனக்கு வழங்கியுள்ளது. மேலும் எனது பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு மக்களால் கூட்டாக பாடப்பட்டதற்கான அங்கீகாரமும் எனது சாதனையில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.