திருப்பூரில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்: விவசாயிகள் 50 பேர் கைது
திருப்பூரில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இரண்டாம் நாளாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
போராட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் முத்துசாமி, கொ.ம.தே.க. விவசாய அணி மாவட்ட செயலாளர் லோகநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பாலதண்டபாணி, அகில இந்திய விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் மதுசூதனன் கண்டன உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், கொ.ம.தே.க. ஒருங்கிணைந்த விவசாய அணி மாவட்ட செயலாளர் தேவராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் ராசு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் பஞ்சலிங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சாவித்திரி உள்பட விவசாயிகள் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தின்போது விவசாயிகளின் நிலங்களை காவு கேட்கும் கார்ப்ரேட்டு நிறுவனத்தினரை சாட்டையால் அடித்து விரட்டுவோம் என்பதை தெரிவிக்கும் வகையில் கார்ப்ரேட் நிறுவனத்தினர் போன்ற ஒருவரை விவசாயிகள் சாட்டையால் அடிப்பது போன்று நடித்துக் காட்டினார்.
இதைத்தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 50 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.