உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரை இன்று ரெயில் சோதனை ஓட்டம் - 11 ஆண்டுகளுக்கு பின் ரெயில்வருவதால் மக்கள் மகிழ்ச்சி

உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரை இன்று ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. 11 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2020-12-16 15:44 GMT
ஆண்டிப்பட்டி,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது மதுரை-போடி இடையே மீட்டர்கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இதை அகலரெயில் பாதையாக மாற்ற கடந்த 2009-ம் ஆண்டு ரெயில்சேவை நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையிலான 37 கிலோமீட்டர் தூர பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து உசிலம்பட்டியில் இருந்து தேனி வரையிலான பணிகள் துரிதமாக நடைபெற்றது.

இந்நிலையில் உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரையிலான 21 கிலோமீட்டர் தூர அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. இதைத்தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை ரெயிலை இயக்கி சோதனைஓட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்படி உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டிஇடையே 120 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதிதாக அமைக்கப்பட்ட ரெயில் பாதையில் நேற்று ரெயில் என்ஜினை இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. அதிவேக சோதனை நடைபெற உள்ளதால் இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிவரையில் ரெயில் தண்டவாள பகுதியில் மக்கள் நடமாட வேண்டாம் என்று ரெயில்வே துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டிப்பட்டிக்கு ரெயில் வர உள்ளதால் தேனி மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்