ஓமலூர் அருகே வேன்-லாரி மோதல்: சிறுவன் உள்பட 2 பேர் பலி - 18 பேர் படுகாயம்
ஓமலூர் அருகே வேன், லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
ஓமலூர்,
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தார்சாலை அமைக்கும் பணிக்காக எடப்பாடி குஞ்சம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் 20 பேர் நேற்று காலை ஒரு சரக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர்.
இந்த வேனை எடப்பாடியை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஓட்டி வந்தார். ஓமலூரை அடுத்த சேலம் விமான நிலையம் அருகே குப்பூர் பிரிவு சாலை பகுதியில் வேன் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க ரோட்டின் வலதுபுறமாக வேனை டிரைவர் திருப்பினார்.
அப்போது வேன் நிலைதடுமாறி ரோட்டின் மறுபுறம் கவிழ்ந்தது. அந்த நேரத்தில் தர்மபுரியில் இருந்து சேலத்தை நோக்கி வந்த லாரி திடீரென வேன் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும், வேனும் பலத்த சேதம் அடைந்தது. வேனில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு ரோட்டில் பலத்த காயத்துடன் கிடந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடியவர்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு ஓமலூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே எடப்பாடி குஞ்சம்பாளையம் பகுதியை சேர்ந்த மெய்வேல் (60), மணிகண்டன் (4) ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த வைத்தீஸ்வரன் (13), பழனிசாமி (40), ராஜவேல் (24), ஆறுமுகம் (26), ருத்ரசாமி (30), ராஜா (60), காவியா (11), பாப்பாத்தி (41), கோவிந்தராஜ் (32), பாலமுருகன் (24), துரைசாமி (39), கனகாம்பரம் (55), வேல்முருகன் (35), அய்யம்பெருமாள் (40), பெருமாயி (45), கதிர்வேல் (21), அய்யம்மாள் (57) உள்பட 18 பேர் ஓமலூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக தர்மபுரி- சேலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.