தர்மபுரியில், 2-வது நாளாக விவசாயிகள் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம் - 50 பேர் கைது

தர்மபுரியில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த 50 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-12-16 13:53 GMT
தர்மபுரி,

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமைப்பு சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு போராட்டக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. போராட்டத்தில் பங்கேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், தி.மு.க. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தங்கமணி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன், செயலாளர் அர்ஜுனன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைசாமேரி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் மின்சார திருத்த சட்டம் 2020-ஐ திரும்பப்பெற வேண்டும். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாய விளை நிலங்களை பாதிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த கூடாது என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்