கோவை கலெக்டர் அலுவலகம் முன் 2-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - 60 பேர் கைது

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 2-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-16 12:30 GMT
கோவை,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், பொருளாளர் நடராஜன், தேர்தல் பணிக்குழு செயலாளர் சேதுபதி, வரதையன், முத்துசாமி கலையரசன், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த திருஞானசம்பந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், விவசாயத்திற்கு வழங்கப் பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, விவசாயிகளின் நலனை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் கைகளை தட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு கோவை கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்