புரெவி புயலால் பயிர்கள் பாதிப்பு குறித்து 2 நாளில் அரசிடம் அறிக்கை தாக்கல் வேளாண்மைத்துறை இயக்குனர் பேட்டி
புரெவி புயலால் பயிர்கள் பாதிப்பு குறித்து 2 நாளில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக நெல், கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் பாதித்த பயிர்களை வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே கண்ணனாறு என்ற காட்டாற்றில் மழை வெள்ளத்தில் கரை உடைப்பு ஏற்பட்டு, பெரியக்கோட்டை, சொக்கனாவூர் கிராமங்களில் வயல்களில் பல்வேறு நிலைகளில் இருந்த நெற்பயிர்களைப் பார்வையிட்டும், ஒரத்தநாடு அருகே உளூர் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழையால் சேதமானதைப் பார்வையிட்டும், விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
பயிர்கள் பாதிப்பு
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலையில் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் புயல், மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் தட்சிணாமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் 1 லட்சத்து 26 ஆயிரத்து 475 எக்டேரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1 லட்சத்து 35 ஆயிரத்து 147 எக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விவசாயிகள் 90 சதவீதம் பேர் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர்மழையின் காரணமாக 11 ஆயிரத்து 730 எக்டேரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
2 நாளில் அரசிடம் அறிக்கை
மழை பாதிப்புகள் தொடர்பாக வருவாய்த் துறை மற்றும் வேளாண்மை துறையினரோடு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் புரெவி புயல் மற்றும் தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் இது தொடர்பான அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும்.
அதன்பிறகு விவசாயிகளின் பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும். அதிகமான விவசாயிகள் காப்பீடு செய்திருப்பதால், இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மதுக்கூர்
மதுக்கூர் அருகே பெரியக்கோட்டை கிராமத்தில் மழையால் சேதம் அடைந்த பயிர்களை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது பட்டுக்கோட்டை சி.வி.சேகர் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் பாலச்சந்தர், வேளாண் துணை இயக்குனர்கள, ஈஸ்வர், கோமதிதங்கம், சுதா, இணை இயக்குனர் திலகவதி ஆகியோர் உடன் இருந்தனர்.