வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெற கேட்டும், டெல்லியில் போராடும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் திருவாரூரில் தொடங்கியது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
காத்திருப்பு போராட்டம்
நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், விவசாயிகள் நலச்சங்க மாவட்ட தலைவர் சேதுராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கலைவாணன், ஆடலரசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் வேளாண் அவசர சட்டங்களை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குடவாசல் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு குடவாசல் வடக்கு ஒன்றிய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் தீனதயாளன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகமது சலாவுதீன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அப்போது அவர், குடவாசல் ஒன்றியத்தை சேர்ந்த 49 ஊராட்சிகளிலும் சாலை வசதி, கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். குறிப்பாக எரவாஞ்சேரி கடைவீதியில் கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பழுது நீக்கம் செய்து தரவேண்டும். ஆற்றங்கரைகளில் பழுதடைந்துள்ள இடங்களில் தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் குமரேசன், விஜய், ஒன்றிய செயலாளர் பகத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவாரூர் தண்டலை ரிலையனஸ் பெட்ரோல் பங்க் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் மாதவன், உலகநாதன் சேதுராமன், சிறைசெல்வன், மாவட்ட துணை அமைப்பாளர் குணா, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில அமைப்பாளர் ராஜேஷ், முற்போக்கு மாணவர்கள் மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், நகர செயலாளர் ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.