கடலூரில் விவசாய சங்கத்தினர் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் 20 பெண்கள் உள்பட 100 பேர் கைது
கடலூரில் விவசாய சங்கத்தினர் 2-வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 20 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாய சங்கத்தினர் 14-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்து இருந்தனர். அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 72 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலை விவசாய சங்கத்தினர் கரும்பு, தேங்காய், மாங்காய் உள்ளிட்டவற்றுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எம்.சேகர், விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சரவணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜா, மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு, மாவட்ட பொருளாளர் நந்தா, இணை செயலாளர் மணிவாசகம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் தேன்மொழி, அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறாகுமார், கடற்கரை வியாபாரிகள் சங்க தலைவர் பரிதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கைது
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், மணிகண்டன், கதிரவன் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.