விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக விரைவில் ஆர்ப்பாட்டம் வேல்முருகன் அறிவிப்பு
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் விவசாயிகளை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்த இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.;
உளுந்தூர்பேட்டை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த சிலரால் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து வேல்முருகன் உள்பட 14 பேரை கைது செய்து இவர்கள் மீது உளுந்தூர்பேட்டை 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட 11 பேர் ஆஜரானார்கள். பின்னர் இந்த வழக்கை அடுத்த மாதம்(ஜனவரி) 5-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கந்துவட்டி
தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. கந்து வட்டி விடும் நபர்கள் மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே தமிழக வாழ்வுரிமை கட்சி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த விவசாய மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தது. தற்போது டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக விரைவில் சென்னையில் அனைத்து விவசாயிகளையும் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்
தமிழகம் முழுவதும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செய்துள்ள ஊழல்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஊழல் அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
ரஜினி ஒரு பலூன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது என்பது ஒரு பலூன் போல, அது பார்ப்பதற்கு பெரிதாக தெரியலாம். ஆனால் எப்படி ஒரு குண்டூசி பட்டதும் பலூன் காணாமல் போகிறதோ அதுபோல ரஜினிகாந்தும் விரைவில் காணாமல் போவார். இவ்வாறு அவர் கூறினார்.