ரிஷிவந்தியம் அருகே மினி கிளினிக் திறக்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 87 பேர் கைது

ரிஷிவந்தியம் அருகே மினி கிளினிக் திறக்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் 87 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-12-16 03:19 GMT
ரிஷிவந்தியம், 

தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதில் ரிஷிவந்தியம் அடுத்த கீழ்ப்பாடி கிராமத்தில் மினிகிளினிக் திறப்பதற்காக அரசு கட்டிடம் தயார் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். ஆனால் கீழ்ப்பாடி கிராமத்தில் மினி கிளினிக் திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் கீழ்பாடி கிராமத்தில் மினி கிளினிக் திறக்கக்கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து திருவண்ணாமலை-தியாகதுருகம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

87 பேர் கைது

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட அவர்கள் மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட 87 பேரை போலீசார் கைது செய்தனர். மினி கிளினிக் திறக்கக்கோரி கிராமநிர்வாக அலுவலர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டசம்பவம் கீழ்ப்பாடி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்