டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் 130 பேர் மீது வழக்கு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சி,
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பிரதான சாலையில் நேற்று முன்தினம் போக்குவரத்துக்கு இடையூறாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் காரணமாக சாலை மூடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. முதல் நாள் போராட்டம் நடந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், நேற்று போலீசார் இடத்தை மாற்றிக்கொடுத்தனர். அதன்படி, திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் பாதையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் அருகில் சாலையின் ஓரமாக இடம் ஒதுக்கி தரப்பட்டது.
130 பேர் மீது வழக்கு
அங்கு தமிழக விசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் பல்வேறு கட்சியினர் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர்.
இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக மாநகர துணை போலீஸ் கமிஷனர் பவன் குமார் ரெட்டி மேற்பார்வையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் அனுமதியின்றி ஒன்று கூடியதாக 130 பேர் மீது செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.