ரூ.21 லட்சம் மோசடி: தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்கு
திருச்சியில் பங்கு தொகை தருவதாக கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
திருச்சி,
திருச்சி தில்லைநகர் 7-வது கிராசில் ஆல்பா எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் சாம்சங் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரை நடத்தி வந்தவர் ராஜகோபால். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் திருச்சி விமான நிலையம் பகுதி விஸ்வகர்மா நகரை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 28) என்பவரிடம் தொடர்பு கொண்டு தனது நிறுவனத்தில் ரூ.50 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.49 ஆயிரத்து 500 லாப பங்கு தருவதாக கூறினார்.
இதனை உண்மை என நம்பிய மகேஷ்குமார் ரூ.15 லட்சத்து 60 ஆயிரத்து 389-ஐ ராஜகோபாலின் மனைவி கிருஷ்ணவேணியின் வங்கி கணக்கில் ெ்சலுத்தினார். சில மாதங்கள் மட்டுமே பங்கு தொகை வழங்கிய ராஜகோபால் பின்னர் தொகை வழங்கவில்லை. மேலும் தனது காரையும் மகேஷ்குமாரிடம் விற்பதாக கூறி ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்தை வாங்கினார். ஆனால் காரை அவரிடம் ஒப்படைக்கவில்லை. இதுபற்றி மகேஷ்குமார் நேரில் சென்று கேட்ட போது அவரை மிரட்டி உள்ளார்.
ரூ.21 லட்சம் மோசடி
இதுபற்றி மகேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் ராஜகோபால் அவரது மனைவி கிருஷ்ணவேணி, தஞ்சாவூைர சேர்ந்த ரமேஷ், அன்பரசன், மதுரைைய சேர்ந்த ஆடிட்டர் காளிஸ் ஆகிய 5 பேர் மீது ரூ.21 லட்சத்து 7 ஆயிரம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.