புதுக்கோட்டை மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதித்த 2 ஆயிரத்து 89 பேருக்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை கலெக்டர் தகவல்
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 89 பேருக்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவரை மனித நேயத்துடன் நடத்த வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட 2,089 பேர் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 940 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதுடன், 151 பேருக்கு முதியோர் உதவித் தொகையும், 56 பேருக்கு விதவை உதவித்தொகையும், 56 பசுமை வீடுகளும், 46 பேருக்கு தாட்கோ கடன் உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல 27 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களும், 34 மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
பரிசோதனை
ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளின் கல்விக்காக 127 குழந்தைகளுக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மூலம் ரூ.3.10 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்ய அனைவரும் தன்னார்வமாக முன்வர வேண்டும். எய்ட்ஸ் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் வாழ்க்கை தரம் உயரவும், வாழ்நாளை நீட்டிக்கவும் பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கடந்த ஆண்டு மாவட்ட அளவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட தலா 3 மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோன்று சமபந்தி விருந்தும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சந்திரசேகரன், பொதுசுகாதார துணை இயக்குனர்கள் கலைவாணி, விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, துணை கலெக்டர் (பயிற்சி) சுகிதா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவாசுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.