சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-12-16 00:49 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கங்கானிப்பட்டியை சேர்ந்தவர் காடப்பன் (வயது 66). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த 12-3-2019 அன்று 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். அந்த சிறுமி மனவளர்ச்சி குன்றியவர் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திருமயம் அனைத்து மகளிர் போலீசார், காடப்பன் மீது போக்சோ சட்டம் உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறை தண்டனை

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி காடப்பனுக்கு போக்சோ சட்டத்தில் 2 பிரிவுகளில் தலா 5 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுமி என தெரிந்தும் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், இதனை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.

அதன்படி அவர் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.2½ லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து காடப்பனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்