விருதுநகர் - சாத்தூரில் கமல்ஹாசன் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு
விருதுநகர் மற்றும் சாத்தூரில் கமல்ஹாசன் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அனுமதி மறுப்பு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த 13-ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார். நேற்று விருதுநகரில் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டார்.
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூரில் அவர் பொது மக்களிடையே திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
வரவேற்பு
கமல்ஹாசன் விருதுநகர் மூளிப்பட்டி அரண்மனை அருகே கூடியிருந்த மக்களை பார்த்ததும் திறந்த வேனில் எழுந்து நின்று கைகூப்பி புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தார்.
ஆனாலும் பிரசாரம் எதுவும் மேற்கொள்ளாமல் அந்த இடத்தை மவுனமாக கடந்து சென்றார்.
அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் உற்சாகத்துடன் கையசைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக போக்குவரத்து கழக பணிமனை முன்பு கமல்ஹாசனுக்கு மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், முனியராஜ், ஹரிராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாத்தூர்
அதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று சாத்தூர் வந்தார்.பிரசாரத்தில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாததால் தான் வந்த வாகனத்தில் இருந்தவாறே பொதுமக்களை பார்த்து கையசைத்த படி மவுனமாக சென்றார்.