கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

கடம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று காங்கிரசார் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் நூதன போராட்டம் நடத்தி, கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2020-12-15 22:00 GMT
கயத்தாறு,

காங்கிரஸ் கட்சியின் தூத்துக்கு மாவட்ட துணை தலைவர் வேலுசாமி தலைமையில், கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை முன்னிலையில் காங்கிரசார் கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு கையில் தாம்பூலத்துடன் சென்றனர். அதில் தேங்காய், பழம், ஊதுபத்தியுடன் அக்னி சட்டிஏந்தி போராட்டம் நடத்தினர்.

பின்னர் தாலுகா அலுவலகத்தில் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கயத்தாறு தாலுகா கடம்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கிடையாது. இதனை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

கடம்பூர் ரெயில் நிலையத்தில் ஆண்டாண்டு காலமாக மைசூர் எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், கோவை- நெல்லை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- ஈரோடு எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் நின்று சென்றது. ஆனால் தற்போது கடந்த சில மாதங்களாக இங்கு எந்த ரெயில்களும் நின்று செல்வதில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகிற 22-ந் தேதி கடம்பூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்படும். மேலும் காங்கிரசார் தலைமையில் ரெயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கயத்தாறு நகர மகளிர் அணித்தலைவி சுசிலா மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்