விருதுநகரில் சர்வர் பழுது காரணமாக இ-சேவை மையங்கள் முடங்கியுள்ள நிலை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விருதுநகரில் சர்வர் பழுது காரணமாக இ-சேவை மையங்கள் முடங்கி உள்ளதால் முறையாக செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது

Update: 2020-12-15 23:53 GMT
சேவை மையங்கள்
பொதுமக்கள் அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சான்றிதழ் பெறவும், பட்டா மாறுதல் மற்றும் புதிய பட்டா பெறுதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கவும் சேவை மையங்களை பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனால் சமீபகாலமாக இ-சேவை மையங்களில் செயல்பாடு அதிகரித்து அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. விருதுநகரில் இ-சேவை மையங்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் சர்வர் பழுது காரணமாக முடங்கியுள்ளன.

முடக்கம்
தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கூட்டுறவுத் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் மட்டுமல்லாது தனியார் நடத்தும் சேவை மையங்களும் முற்றிலுமாக முடங்கி விட்டன.

முடங்கியுள்ள சேவை மையங்களை செயல்பாட்டில் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை தொடர்கிறது. இதனால் இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் வருவாய்த்துறை சான்றுகள் பெற முடியாமலும், சமூக நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமலும், வங்கி கடன் பெற தேவையான பட்டா அடங்கல் ஆகியவற்றை பெற முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பயிர்கடன்
தற்போதைய நிலையில் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் இ-சேவை மையங்களை பயன்படுத்த வேண்டியநிலை உள்ளது.

வங்கி கடன் பெறவிரும்பும் விவசாயிகள் இ-சேவை மையம் மூலம் பட்டா பெற முடியாத நிலையில் தவிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்கள் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தாமதமாகும் பட்சத்தில் விவசாயிகள் பயிர் கடன் பெற முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய துறைகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்