திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.;
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த தொழுவூர் வீரராகவ நகரை சேர்ந்தவர் செந்தில் விநாயகம் (வயது 60). இவர் சென்னை காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு செந்தில் விநாயகம் தன்னுடைய மனைவி மற்றும் குடும் பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு நெல்லையில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பீரோவை திறந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து செந்தில் விநாயகம் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல திருவள்ளூரை அடுத்த அயத்தூர் சீனிவாச நகரை சேர்ந்தவர் செந்தில்நாதன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சித்ரா (35). தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவரது வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் ஆட்கள் இருப்பதை அறிந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதே போல செந்தில்நாதன் வீட்டின் பக்கத்து வீட்டை சேர்ந்த கிரி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த ரூ.600-ஐ எடுத்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.