டி.வி. நடிகை சித்ரா விவகாரம் கணவரின் சந்தேக பார்வையால் தற்கொலை செய்தது அம்பலம்
டி.வி. நடிகை சித்ரா விவகாரத்தில் கணவரின் சந்தேக பார்வையால் தற்கொலை செய்தது அம்பலம் ஆனது.
பூந்தமல்லி,
டி.வி. நடிகை சித்ரா கடந்த வாரம் செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நசரத்பேட்டை போலீசார் அவரது கணவர் ஹேம்நாத், சித்ராவின் பெற்றோர், ஓட்டல் ஊழியர்கள், கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள், ஹேம்நாத்தின் பெற்றோர் என பல தரப்பிலும் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
ஹேம்நாத்திடம் மட்டும் தொடர்ந்து 6 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதையடுத்து சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் செல்போன்களில் பதிவான தகவல்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதன் அடிப்படையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத்தை நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்த போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
ஹேம்நாத்துக்கு பணக்கார நண்பர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களுடன் படப்பிடிப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சித்ராவின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாளடைவில் அவர்கள் இடையே காதல் மலர்ந்தது. இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்புதான் இவர்கள் வாழ்க்கையில் பெரும் சந்தேக புயல் வீச ஆரம்பித்தது. ஹேம்நாத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தனது சந்தேக பார்வையை மனைவி சித்ரா மீது திருப்பினார். படப்பிடிப்பு தளம் மட்டுமல்லாது அனைவரிடமும் சகஜமாக பேசும் சித்ராவிடம் அடிக்கடி எந்த நடிகருடன் நெருக்கமாக இருந்தாய், படப்பிடிப்பு முடித்து வந்தவுடன் இன்று எந்த நடிகருடன் ஆட்டம் போட்டாய், என பல சந்தேக கேள்விகளை கேட்டு சித்ராவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார்.
அது மட்டுமின்றி படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு திடீரென சென்று தகராறு செய்வதையும் அங்கு அவரை ரகசியமாக கண்காணித்து வருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். சித்ரா இறப்பதற்கு முன்பு அவர் நடித்த நாடகத்தில் தன்னுடன் நடிக்கும் சக நடிகருடன் நெருக்கமான காட்சிகள் வருவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது.
இதனை மையமாக வைத்து சித்ராவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாகவும், சம்பவம் நடந்த அன்று கடைசியாக நடந்த படப்பிடிப்பு நிகழ்ச்சியில் நாடகத்தில் கணவனாக நடிக்கும் நடிகரும் கலந்துகொண்டதாகவும், அங்கு சென்ற ஹேம்நாத் படப்பிடிப்பு முடிந்து சித்ராவை ஓட்டலுக்கு காரில் அழைத்து வரும்போதே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓட்டல் அறைக்கு சென்றவுடன் கடுமையான வார்த்தைகளால் வசைபாடி உள்ளார். ஒரு கட்டத்தில், “நீ எனக்கு முக்கியம். என்னை விட்டு போகாதே” என சித்ரா கூறி உள்ளார். ஆனால் ஹேம்நாத் சித்ராவிடம் “நீ இருப்பதை காட்டிலும் இறப்பதே மேல்” என பேசியதால் ஹேம்நாத்தை ஓட்டல் அறையில் இருந்து சித்ரா வெளியேற்றியுள்ளார்.
அதன் பிறகுதான் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. கடைசியாக தனது தாயிடம் பேசிவிட்டு சித்ரா தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், கடந்த 6 நாட்களாக ஹேம்நாத் போலீசார் விசாரணைக்கு போலீஸ் நிலையம் அழைத்தபோது முதல் 2 நாட்கள் சோக முகத்துடன் காணப்பட்டதாகவும், போக, போக போலீஸ் நிலையத்திற்கு சகஜமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையிலேயே தீவிர விசாரணையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஹேம்நாத்தின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் போலீசார் அதிரடியாக ஹேம்நாத்தை கைது செய்துள்ளனர். ஒரு புறம் பணிச்சுமை மறுபுறம் தாயை பிரிந்த மனநிலை, நம்பி வந்த கணவர் தன்மீது சந்தேகத்துடன் பார்ப்பது. இதனை தாங்க முடியாமல் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் தான் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆராய்ந்து தேர்வு செய்து நடித்து வந்த சித்ரா தனது சொந்த வாழ்க்கைக்கு ஏற்ற துணையை தேர்வு செய்வதில் தவறு செய்து விட்டதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா இருவரும் தங்கள் வக்கீலுடன் நேற்று காலை 9½ மணிக்கு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்தனர். ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ அவர்களிடம் 4 மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிந்து வெளியில் வந்த ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது மகன் ஹேம்நாத் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு வரவேண்டிய நிலையில் அவசர அவசரமாக நேற்று முன் தினம் இரவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். யாரை காப்பாற்ற என்னுடைய மகனை அவசர அவசரமாக கைது செய்தார்கள் என்பது தெரியவில்லை. ஆர்.டி.ஓ. விசாரணையில் எங்கள் தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளோம். வரதட்சணையாக நாங்கள் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ பொன்னேரி சிறைத்துறை அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.