ஆலங்குளம் அருகே பயங்கரம்: ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை

ஆலங்குளம் அருகே ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-12-15 23:41 GMT
ஆலங்குளம்,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி முத்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பால் மாணிக்கம் மகன் இசக்கிதுரை (வயது 37), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் ரெட்டியார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் எதிரே அதே ஊரைச் சேர்ந்த கார் டிரைவரான சண்முகராஜ் (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ஆட்டோவின் முன்விளக்கு வெளிச்சம் சண்முகராஜ் முகத்தில் பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, இசக்கிதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு இசக்கிதுரையும் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் சண்முகராஜ், இசக்கிதுரையிடம் பேசுவதற்காக அவரை மின்வாரிய அலுவலகம் அருகே அழைத்தார். இதை நம்பிய இசக்கிதுரை அங்கு சென்றார். அப்போது, அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜ் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் இசக்கிதுரையை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலை, கை, கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இசக்கிதுரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சண்முகராஜ் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து உடனடியாக ஊத்துமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இசக்கிதுரை உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலையில் சண்முகராஜ் தவிர வேறு யாரேனும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? என்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தப்பி ஓடிய சண்முகராஜை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அவர் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட இசக்கிதுரைக்கு சொர்ணமதி என்ற மனைவியும், இஷாந்த் (7), விக்னேஷ் (4) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். ஆலங்குளம் அருகே ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்