மதுரை கோட்டத்தில், பாசஞ்சர் ரெயில்களை உடனடியாக இயக்க வேண்டும்; வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

பயணிகளின் வசதிக்காக உடனடியாக அனைத்து மார்க்கங்களிலும் பாசஞ்சர் ரெயில்களை இயக்க வேண்டும் என்று எம்.பி. வெங்கடேசன் கோட்ட மேலாளரிடம் நேரில் வலியுறுத்தினார்.

Update: 2020-12-15 23:33 GMT
வெங்கடேசன் எம்.பி
ரெயில் சேவை
கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் முழுமையாக ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இது குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனினை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கோரிக்கை மனு ஒன்றை கோட்ட மேலாளரிடம் வழங்கினார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை-ராமேசுவரம் மார்க்கத்தில் பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க வேண்டும். மதுரையில் இருந்து விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு வழக்கம் போல பாசஞ்சர் ரெயில்களை இயக்க வேண்டும்.

மதுரையில் இருந்து திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு தினமும் காலை 7.30 மணிக்கு இயக்கப்பட்ட பாசஞ்சர் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். சமீபத்தில் 200 கி.மீட்டர் தூரத்துக்கு மேல் இயக்கப்பட்ட பாசஞ்சர் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றம் செய்யப்பட்டன. இதனால் கட்டணமும் உயர்ந்துள்ளது.

பாசஞ்சர் ரெயில்கள்
எக்ஸ்பிரசாக மாற்றப்பட்ட பாசஞ்சர் ரெயில்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும். சீசன் டிக்கெட் பெற்று ரெயில்களையே நம்பியிருந்த சிறு வியாபாரிகள் மற்றும் மதுரைக்கு அருகாமையில் உள்ள ஊர்களில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வந்தவர்களின் வசதிக்காக உடனடியாக மதுரை கோட்டத்தில் அனைத்து மார்க்கங்களிலும் பாசஞ்சர் ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

அத்துடன் முன்பதிவு செய்தால் மட்டுமே ரெயிலில் பயணம் செய்ய முடியும் என்ற நடைமுறையை மாற்ற வேண்டும். பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பொதுப்பெட்டிகளை தற்போது இயக்கப்படும் ரெயில்களில் இணைக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிக்கெட் கட்டண சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்