வடவணக்கம்பாடி போலீஸ் நிலையம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார்சைக்கிள் தீவைத்து எரிப்பு; டீ கடைக்காரர் கைது

வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி போலீஸ் நிலையம் எதிரிலேயே சப்-இன்ஸ்பெக்டரின் புல்லட் மோட்டார்சைக்கிளை தீ வைத்து எரித்த டீ கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-12-15 23:06 GMT
கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன்
டீ கடைக்காரர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 51). வடவணக்கம்பாடியில் டீக்கடை நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ராமச்சந்திரன் தனது நண்பர் பத்மநாபனுக்கு வந்தவாசியில் உள்ள, ஒரு கடையில் தவணையில் பணம் செலுத்தும் வகையில் நகை வாங்கிக் கொடுத்தார். இதற்கான கடனை பத்மநாபன் சரிவர செலுத்தவில்லை.

இதனால் ராமச்சந்திரனுக்கும், பத்மநாபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் பத்மநாபனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பத்மநாபன் அளித்த புகாரின்பேரில், வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தார்.

மோட்டார்சைக்கிளுக்கு தீ வைப்பு
பின்னர் ஜாமினில் வெளியே வந்த ராமச்சந்திரன் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடவணக்கம்பாடி போலீஸ் நிலையம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்தின் புல்லட் மோட்டார்சைக்கிள் நேற்று அதிகாலை தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட போலீசார் தீயை அணைத்தனர்.

தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ராமச்சந்திரன் புல்லட்டை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்