புயலுக்குப்பின் களைகட்டிய பொய்கை வாரச்சந்தை; ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம்

புயலுக்குப்பின் நேற்று பொய்கை வாரச்சந்தை களைகட்டியது. சுமார் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக கூறப்படுகிறது.

Update: 2020-12-15 22:13 GMT
பொய்கை வாரச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகள் விற்பனைக்கு வந்ததால் அவற்றை வாங்க விவசாயிகள்
பொய்கை வாரச்சந்தை
அணைக்கட்டு தாலுகா பொய்கை சத்தியமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாட்டுச் சந்தை மற்றும் காய்கறி சந்தைகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் கறவை மாடுகள் உள்பட அனைத்துப் பொருட்களும் விவசாயிகளுக்கு மலிவான விலையில் கிடைப்பதால் திருவிழா போன்ற கூட்டம் காணப்படும். இந்த சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் உயர்ரக கறவை மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

இந்த நிலையில் நவம்பர் மாதம் முதல் கடந்த 7-ந் தேதி வரை நிவர் மற்றும் புரெவி புயலால் வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் வாரச்சந்தை சரியாக நடைபெறவில்லை. நேற்று முதல் இந்த சந்தை மீண்டும் களைகட்டத் தொடங்கியது. அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கறவை மாடுகள் விற்பனைக்கு வந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு கறவை மாடுகளை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
இதேபோல் வண்டி மாடுகள், இளம் கன்றுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிக அளவில் விற்பனையானது. மலிவான விலையில் காய்கறிகள் கிடைத்ததால் மக்கள் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் கடந்த 3 வாரமாக பொய்கை மாட்டுச்சந்தை சரியாக நடைபெறவில்லை. இதனால் இந்த வாரம் அதிக அளவில் கறவை மாடுகள் விற்பனைக்கு வந்தன. விவசாயிகள் ஆர்வமுடன் கறவை மாடுகள் மற்றும் வண்டி மாடுகளை வாங்கி சென்றனர். இந்த வாரம் நடந்த பொய்கை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்திருக்கும் என்றார்.

மேலும் செய்திகள்