மேலாளரை கைதுசெய்ய கோர்ட்டு உத்தரவு எதிரொலி; ராமநாதபுரத்தில் விவசாயியின் கடன் பத்திரங்கள் வங்கி திருப்பி வழங்கியது
ராமநாதபுரத்தில் விவசாயி வாங்கிய வங்கி கடனை திருப்பி செலுத்திய நிலையில் அடமான பத்திரத்தை திருப்பி வழங்காததால் வங்கி மேலாளரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக விவசாயியின் கடன் அடமான பத்திரங்களை வங்கி நிர்வாகம் உடனடியாக திருப்பி ஒப்படைத்தது.
விவசாய கடன்
ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன். இவர் ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் விவசாய கடன் திட்டத்தில் மண்புழு உரம் தயாரிக்க கடந்த 2007-ம் ஆண்டு ரூ.4 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதற்காக அவர் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் உள்ள சொத்திற்கான பத்திரத்தை அடமானமாக கொடுத்திருந்தாராம். இந்த கடன் தொகைக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் வாங்கிய கடன் தொகையுடன் மானிய தொகையையும் சேர்த்து கட்டினால்தான் அடமான பத்திரங்களை திருப்பி தரமுடியும் என்று வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக லோக் அதாலத் அமர்வின்போது மானிய தொகையை கட்ட வேண்டியதில்லை. மீதம் உள்ள கடன் தொகையை மட்டும் செலுத்தினால்போதும் கடன் பத்திரங்களை திருப்பி கொடுப்பதாக வங்கி அதிகாரிகள் முன்னிலையில் முடிவாகி உள்ளது.
உத்தரவு
இதன்படி ராதாகிருஷ்ணன் மீதம் உள்ள அசல் தொகையை கட்டிய நிலையில் வங்கியினர் கடன் பத்திரங்களை தரமறுத்துவிட்டார்களாம். மானிய தொகை பாக்கி உள்ளது அதனை கட்ட வேண்டும் என்று மீண்டும் தெரிவித்துள்ளனர்.
இதனால் லோக் அதாலத் அமர்வு உத்தரவினை மீறிய வங்கி நிர்வாகம் மீது ராதாகிருஷ்ணன் ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தனது கடன் பத்திரங்களை பெற்றுத்தருமாறு கோரினார். இந்த வழக்கில் கடன் பத்திரங்களை வழங்காத மேற்கண்ட வங்கி விவசாய கடன் பிரிவு மேலாளரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி முல்லை உத்தரவிட்டார்.
இதன்படி கடந்த வாரம் கோர்ட்டு ஊழியர் வங்கிக்கு மேலாளரை கைது செய்ய சென்றபோது அவர் விடுமுறையில் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஒப்படைப்பு
நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவினை தொடர்ந்து வங்கி நிர்வாகம் மேற்கண்ட ராதாகிருஷ்ணனின் 2 அடமான பத்திரங்களையும் வங்கி நிர்வாக வக்கீல் மூலம் கோர்ட்டில் ஒப்படைத்தது. இதனை தொடாந்து நீதிபதி முல்லை அந்த பத்திரங்களை விவசாயி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.