கர்நாடக மேல்-சபையில் ரகளை: பா.ஜனதாவினரின் செயல், ஜனநாயகத்திற்கு அவமானம்; டி.கே.சிவக்குமார் பேட்டி
கர்நாடக மேல்-சபையில் நடந்த ரகளையில் பா.ஜனதாவினரின் செயல் ஜனநாயகத்திற்கு அவமானம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மிகப்பெரிய அவமானம்
கர்நாடக மேல்-சபையில் ஆளும் பா.ஜனதா உறுப்பினர்கள் குண்டர்களை போல் நடந்து கொண்டுள்ளனர். மேலவை தலைவரை உள்ளே வரவிடாமல் கதவை பூட்டியுள்ளனர். பாஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி புனிதமற்ற கூட்டணியை வைத்துக் கொண்டு மேலவை தலைவர் பதவியை பெற முயற்சி செய்கிறது. பா.ஜனதாவினர் செய்த செயல், ஜனநாயகத்திற்கு செய்த மிகப்பெரிய அவமானம். எல்லாவற்றையும் செய்துவிட்டு காங்கிரசாரை குண்டர்கள் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள்.
இருக்கையில் இருந்த துணைத்தலைவரை காங்கிரசார் வெளியேற்றினார்கள். ஆனால் பா.ஜனதாவினர் நடந்து கொண்ட விதம் சரியா?. மேலவை தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதை சட்ட வழிமுறைகளின்படி தான் பெற அக்கட்சி முயற்சி செய்ய வேண்டும். மந்திரி சுதாகர் எங்கள் கட்சியை குறை கூறியுள்ளார்.
மேலவை தலைவர் பதவி
நாங்கள் ஆட்சியையே இழந்துள்ளோம். மேலவை தலைவர் பதவி எங்களுக்கு பெரியது ஒன்றும் இல்லை. இந்த மேலவை தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவருக்கு இன்னும் எங்கள் கட்சி மீது ஆசை இருக்கும் என்று நினைக்கிறேன். நான் எங்கள் கட்சி மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து பேசினேன். கட்சி நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.