கர்நாடக மேலவை தலைவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்; முதல்-மந்திரி எடியூரப்பா வலியுறுத்தல்
கர்நாடக மேலவை தலைவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வலியுறுத்தினார்.
கர்நாடக மேல்-சபையில் நேற்று நடந்த கலாட்டா குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரசாரின் கலாசாரம்
மேலவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதத்தை பா.ஜனதா உறுப்பினர்கள் கொடுத்துள்ளனர். இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தும் பணியை மேலவை துணைத்தலைவர் மேற்கொள்வார் என்று நாங்கள் நேற்றே (நேற்று முன்தினம்) கூறினோம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதித்து அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மேலவை தலைவருக்கு இல்லை.
நேற்று மேல்-சபையில் மணி ஒலித்த பிறகே தலைவர் இருக்கையில் துணைத்தலைவர் அமர்ந்தார். மேலவை தலைவர் பதவியில் தொடர பெரும்பான்மை பலம் இல்லை. துணைத்தலைவரின் ஆடையை பிடித்து இழுத்து இருக்கையில் இருந்து வெளியேற்றிய சம்பவம், நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை. இது காங்கிரசாரின் கலாசாரத்தை காட்டுவதாக உள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி பகிரங்கமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
உத்தரவிட வேண்டும்
அதனால் மேலவை தலைவர் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவருக்கு இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் உத்தரவிட வேண்டும். பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரிடம் மேலவை தலைவருக்கு எதிராக புகார் அளிக்க உள்ளனர்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
சட்டத்துறை மந்திரி மாதுசாமி கூறுகையில், “மேலவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்றும், அதனால் மேலவை தலைவர் தனது இருக்கைக்கு வர மாட்டார் என்றும் நாங்கள் நினைத்தோம். அதனால் தான் அந்த இருக்கையில் துணைத்தலைவர் அமர்ந்தார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் சரியல்ல. சபையின் கண்ணியத்தை சீரழித்துவிட்டனர்“ என்றார்.