விண்வெளி ராக்கெட்டுகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு ஆற்றியவர்; விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா மரணம்; பிரதமர் மோடி, முதல்-மந்திரி எடியூரப்பா இரங்கல்

விண்வெளி ராக்கெட்டுகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு ஆற்றியவரான விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-12-15 19:56 GMT
பேராசிரியர் ரோத்தம் நரசிம்மாவின் உடலுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.
விஞ்ஞானியாக பணியாற்றினார்
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் ரோத்தம் நரசிம்மா. இவர் விஞ்ஞானி ஆவார். சதீஸ்தவான், இஸ்ரோ தலைவராக இருந்தபோது, இவர் பணியாற்றினார். செயற்கை கோள்கைகளை ஏவும் ராக்கெட்டுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு ஆற்றியவர். அவர் வயோதிகம் காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. 1933-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி பிறந்த அவர், 1962-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் விண்வெளித்துறை பொறியியல் பிரிவில் பேராசிரியராக பணியாற்றினார். 1980-ம் ஆண்டு வாக்கில் செயற்கைகோள் ஏவும் ஏ.எஸ்.எல்.வி ராக்கெட் தோல்வியில் முடிந்தது. இந்த தோல்விக்கான காரணத்தை அறிய அப்போது 2 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் இஸ்ரோவுக்கு வெளியே உள்ள நிபுணர்களால் அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைவராக ரோத்தம் நரசிம்மா செயல்பட்டார்.

பத்மவிபூஷண் விருது
அவரது குழு வழங்கிய ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள், அடுத்து வந்த செயற்கைகோள் ஏவும் ராக்கெட்டுகளை உருவாக்க பெரும் உதவியாக இருந்தது. விண்வெளித்துறையில் அவர் ஆற்றிய சேவைக்காக 2013-ம் ஆண்டு அவருக்கு நாட்டின் 2-வது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் இவரும் சேர்ந்து ‘திரவ இயக்கவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள்’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளனர். ரோத்தம் நரசிம்மாவின் மறைவுக்கு விஞ்ஞானிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று கூறுகையில், “விண்வெளி திட்டங்களில் ரோத்தம் நரசிம்மா ஆற்றிய முக்கிய பங்களிப்பு அளப்பரியது. மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் நிறுவனங்களை உருவாக்கிய அவரது பணி எப்போதும் நினைவு கூரத்தக்கது“ என்றார்.

பங்களிப்பு
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன், “பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.-3 ராக்கெட்டுகளின் வெற்றியில் ரோத்தம் நரசிம்மாவின் பங்கு மிக முக்கியமானது. அவர் நல்ல கல்வியாளர். அவர் பணியாற்றிய நிறுவனத்தில் ஒழுக்கமான சூழலை உருவாக்கி இருந்தார். புதியவைகளை கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரிடம் அதீத திறமை இருந்தது. யோகா, அறிவியல், கணிதம், வரலாறு மற்றும் இந்திய தத்துவம் குறித்த விஷயங்களில் அவருக்கு ஆழமான அறிவு இருந்தது“ என்றார்.

இஸ்ரோவின் இன்னொரு முன்னாள் தலைவர் மாதவன் நாயர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “இந்தியாவின் விண்வெளி திட்டங்களில் ரோத்தம் நரசிம்மாவின் பங்களிப்பு இருக்கிறது. அவர் தனது கருத்துகளை வெளிப்படையாகவும், தைரியமாகவும் கூறினார். விண்வெளி தொடர்பாக பிரச்சினைகள் இருந்தபோது அவரை நாங்கள் எப்போதும் சந்தித்து அதை எடுத்துக் கூறுவோம். அவர் உடனே இஸ்ரோவுக்கு ஓடோடி வருவார்“ என்றார்.

மறைந்த ரோத்தம் நரசிம்மாவுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்