15 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவ கல்லூரி பேராசிரியர் கைது
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவ கல்லூரி பேராசிரியர் மற்றும் பெண் விபசார தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர்,
சென்னை தண்டையார்பேட்டையில் 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அந்த சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய தரகர்கள் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமகொடூரர்கள் என கைதானவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
சங்கிலி தொடர்போல ஒருவர்பின் ஒருவராக கைதாகி வருகின்றனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை பா.ஜ.க. பிரமுகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 23 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விபசார தரகர்கள் கொடுத்த தகவலின்பேரில் மற்றொரு விபசார தரகரான திருவேற்காடு பகுதியை சேர்ந்த கஸ்தூரி என்ற அனிதா (34) என்ற பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர், அந்த சிறுமியை குரோம்பேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற மனோதத்துவ மருத்துவ கல்லூரி பேராசிரியர் ராஜசுந்தரம் (62) என்பவருக்கு விருந்தாக்கியது தெரிந்தது. இதையடுத்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பேராசிரியர் ராஜசுந்தரம் மற்றும் பெண் விபசார தரகர் அனிதா இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களுடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் மேலும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை கைது செய்ய உள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.