நாமக்கல்லில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம்: விவசாய சங்கத்தினர் உள்பட 58 பேர் கைது

நாமக்கல்லில் நேற்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் உள்பட மொத்தம் 58 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2020-12-15 04:45 GMT
நாமக்கல், 

மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்காக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நேற்று தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்து இருந்தனர்.

இதையொட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் படைவீடு பெருமாள் தலைமையில் முற்றுகை போராட்டத்திற்கு வந்த விவசாயிகள், இந்திய மாணவர் சங்கத்தினர் என மொத்தம் 28 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் ஜோதி தலைமையில் கருங்கல்பாளையத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெயில் மறியல்

தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு மறியலில் ஈடுபட்ட வந்த அந்த கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கிட்டாச்சு சிவா, மாநில ஊடக பிரிவு செயலாளர் செந்தமிழன் உள்ளிட்ட 19 பேரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்து, வாகனத்தில் ஏற்றி சென்று திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.

நாமக்கல் நகரை பொறுத்த வரையில் வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கைதான 58 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்