வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தஞ்சையில், கொளுத்தும் வெயிலில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தஞ்சையில் கொளுத்தும் வெயிலில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாற்காலிகள் போட போலீசார் அனுமதிக்காததால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.;
தஞ்சாவூர்,
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் அவசர சட்டங்களையும், மின்சார திருத்த சட்ட மசோதாவையும் உடனடியாக திரும்ப பெறக்கேட்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் அமைந்து இருப்பதால் காத்திருப்பு போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கலெக்டர் அலுவலகத்துக்கு பதில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
அதன்படி போராட்டத்தில் ஈடுபட தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் புறப்பட்டனர். ஆனால் டிராக்டர்களில் வந்த விவசாயிகளை பாபநாசம், ஒரத்தநாடு, பாப்பாநாடு, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ஆங்காங்கே டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு பஸ்களில் ஏறி தஞ்சைக்கு வந்தனர்.
பின்னர் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று காலை தொடங்கியது. போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் பாலசுந்தரம், செந்தில்குமார், மாவட்ட தலைவர் வீரமோகன், மக்கள் அதிகாரம் அமைப்பு பொருளாளர் காளியப்பன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொளுத்தும் வெயில்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன், போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்கள் கே.பக்கிரிசாமி, சி.பக்கிரிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளருமான துரைமாணிக்கம், போராட்டத்தை விளக்கி பேசினார்.
போராட்டம் நடைபெற்ற இடத்தில் சாமியான பந்தல்-நாற்காலிகளை போட போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் போராட்டக்குழுவினர் போலீசாரிடம் பேசியதை தொடர்ந்து குறைந்த எண்ணிக்கையில் நாற்காலிகளை போட அனுமதி அளித்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நாற்காலிகளிலும், தரைகளிலும் விவசாயிகள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சிலர் வெயிலின் தாக்கத்தால் அருகில் இருந்த மரத்தின் நிழல்களில் சென்று நின்றனர். பலர் வெயிலில் அமர்ந்து தலையில் துண்டுகளை போர்த்தி அமர்ந்து இருந்தனர்.
மேலும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் தஞ்சை கீழவாசல், அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் இருந்து மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
அதிரடிப்படை குவிப்பு
இதனால் தஞ்சை கீழவாசல், அண்ணாசாலை பின்புறம், பர்மாபஜார் ஆகிய பகுதிகளில் இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்து இருந்தனர். அந்த வழியாக வாகனங்களில் செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். போராட்டம் நடைபெற்ற இடத்தில் திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
மேலும் சிறப்பு அதிரடி படை வீரர்கள் கைகளில் தடிகளுடனும், கவச உடைகள், தலைகவசம் அணிந்தும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேமராக்கள் பொருத்தப்பட்ட வேனை கொண்டு வந்து போராட்ட களம் முழுவதையும் போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். மாலை 5.30 மணியளவில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.