வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி உடலில் நாமம் வரைந்து காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரியில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி உடலில் நாமம் வரைந்தபடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
இந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான பழனி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாநில குழு உறுப்பினர்கள் சின்னசாமி, சேகர், சிவராஜ், கண்ணு, வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்கள்.
38 பேர் கைது
இதில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிராகவும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், நகர தி.மு.க. செயலாளர் நவாப், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வெங்கடப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.