தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

ஊராட்சிகளுக்கு உரிய நிதி வழங்காததை கண்டித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-15 03:25 GMT
தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 251 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவசர பணிகளுக்காக வழங்கப்படும் மாநில நிதிக்குழு மானியத்தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ராஜா, அவைத் தலைவர் கலைச்செல்வன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று கலெக்டர் கார்த்திகாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற காலஅவகாசம் வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டதாக தெரிகிறது.

பிச்சை எடுக்கும் போராட்டம்

இதனை ஏற்க மறுத்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று அரை நிர்வாணத்துடன் மண் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கடைகளில் மண் சட்டி ஏந்தி ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பிச்சை போடுங்கள் என்று பிச்சை எடுத்தனர்.

அப்போது ஊராட்சிகளுக்கு மாநில நிதி மானியத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்துவது மிகவும் வேதனையாக இருக்கிறது. கிராமங்களில் ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியாமலேயே பல்வேறு பணிகள் நிறைவேற்றப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிப்பது இல்லை என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் தர்மபுரி கலெக்டர் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

30 பேர் கைது

இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, ராஜா சோமசுந்தரம், டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து போலீசார் ஒரு பெண் உள்பட 30 ஊராட்சி மன்ற தலைவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்