விழுப்புரம் அருகே நெஞ்சை உருக்கும் துயர சம்பவம்: 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை
விழுப்புரம் அருகே கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு, மனைவியுடன் தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த வி.புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி மகன் மோகன் (வயது 37), தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி விமலேஸ்வரி (30). இவர்களுக்கு ராஜஸ்ரீ(8), நித்யஸ்ரீ(7) என்ற 2 மகள்களும், சிவபாலன் (5) என்ற ஒரு மகனும் இருந்தனர். இவர்களில் ராஜஸ்ரீ அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பும், நித்யஸ்ரீ 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். மோகன், வளவனூர் மெயின்ரோட்டில் சொந்தமாக மரப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் தினமும் காலை 9 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து புறப்பட்டு மரப்பட்டறைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அவருடைய மரப்பட்டறையில் வேலை பார்க்கும் ஊழியரான அதே கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் என்பவர் பட்டறைக்கு வந்துள்ளார். ஆனால் பட்டறை திறக்காததால் மோகனின் செல்போனை பரந்தாமன் தொடர்பு கொண்டுள்ளார். இருப்பினும் அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. உடனே அந்த ஊழியர், மோகனின் மாமனாரான ஜெயகுருவையும், மோகனின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியுள்ளார்.
தூக்கில் 5 பேர் பிணம்
இதனால் பதறியடித்துக்கொண்டு அவர்கள், மோகன் வீட்டிற்கு ஓடி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே அவர்கள் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் ஹாலில் இருந்த மின்விசிறியில் மோகனும், அவரது மனைவி விமலேஸ்வரியும் தனித்தனியாக சேலையால் தூக்கில் பிணமாக தொங்கினர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், 3 குழந்தைகளும் அந்த அறையில் இல்லாததால் அவர்களின் நிலைமை என்னவாயிற்றோ என்று நெஞ்சம் பதைபதைக்க மிகுந்த பதற்றத்தோடு பக்கத்து அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த அறையில் ராஜஸ்ரீ, நித்யஸ்ரீ, சிவபாலன் ஆகிய 3 குழந்தைகளும் ஒரே சேலையில் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர். இதை பார்த்து மோகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கூச்சல்போட்டு கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்களும், இந்த துயர சம்பவத்தை அறிந்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அங்கு கூட்டமாக திரண்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மற்றும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த 5 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-
ஊரடங்கால் நஷ்டம்
ஆரம்பத்தில் மோகன், சென்னையில் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சொந்த ஊரிலேயே மரப்பட்டறை வைத்து தொழில் செய்ய முடிவு செய்து, அதற்காக வளவனூர் மெயின்ரோட்டில் வி.புதுப்பாளையம் பகுதியில் ஒரு இடத்தை சொந்தமாக விலைக்கு வாங்கி அங்கு மரப்பட்டறை வைத்து தச்சு தொழில் செய்து வந்தார். இதன் மூலம் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு ஓரளவு வருமானம் கிடைத்தது.
அதன் பிறகு அவர் சொந்தமாக வீடு கட்டினார். அதுபோல் சொந்தமாக காரும் வாங்கியுள்ளார். இதற்காகவும், தான் பார்த்து வரும் தச்சு தொழிலை இன்னும் விரிவுபடுத்தவும் விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மோகன் கடன் வாங்கியுள்ளார். இதுதவிர வங்கியிலும் அவர் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய சில மாதங்கள் வரை மாதந்தோறும் தவறாமல் வட்டித்தொகையை செலுத்தி வந்துள்ளார்.
இந்த சூழலில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பட்டறை சரிவர இயங்கவில்லை. இதனால் தச்சு தொழிலுக்கு முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டதால், அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதனிடையே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனையும் முழுமையாக அடைக்க முடியாமலும், அந்த கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும் சிரமப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடனை அடைக்க சொல்லியும், வட்டியை கேட்டும் நிதி நிறுவன ஊழியர்கள் அவ்வப்போது மோகன் வீட்டிற்கு நேரில் வந்து அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
மனஉளைச்சல்
இதனால் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை எப்படியாவது அடைத்து விட எண்ணி மோகன் தனக்கு தெரிந்த சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இருப்பினும் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனையும், வங்கி கடனையும் முழுமையாக அடைக்க முடியவில்லை. அதோடு வெளியில் சிலரிடம் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் மோகன் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் 3 குழந்தைகளை எப்படி வளர்த்து கரை சேர்க்கப்போகிறோம் என்று எண்ணி கடந்த ஒரு மாதமாக அவர் மிகுந்த மனஉளைச்சலில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மோகன், தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு சென்றார். தனது முடிவை மனைவி விமலேஸ்வரியிடம் கூறினார். கணவரின் முடிவுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காத விமலேஸ்வரி, கடன் பிரச்சினையால் கவுரவம், நிம்மதியை இழந்து துன்பப்படுவதற்கு பதிலாக உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு அவரும் சம்மதித்தார். தாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டால் தங்களுடைய குழந்தைகளை யார் கவனிப்பார்கள், அவர்கள் அனாதையாகி விடுவார்களே என்று எண்ணிய மோகன்- விமலேஸ்வரி தம்பதியினர், ‘வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையெனில் செத்தால் ஒன்றாக சாவோம்’ என்று நினைத்து தாங்கள் செல்லும் இடத்திற்கே பெற்ற பிள்ளைகளையும் அழைத்துச்சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
குடும்பத்தோடு தற்கொலை
அதன்படி நேற்று முன்தினம் இரவு மோகன்- விமலேஸ்வரி தம்பதியினர் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு தங்களுடைய 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவர்களை ஒரே சேலையில் மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டுள்ளனர். அதன் பிறகு ஆசை, ஆசையாய் வளர்த்த பிள்ளைகளை தாங்களே கொன்று விட்டோமே, இனி இதுபோன்ற நிலைமை எந்தவொரு பெற்றோருக்கும் வரக்கூடாது என்று எண்ணி கதறி துடித்த அவர்கள் இருவரும், பின்னர் தனித்தனி சேலையால் தாங்களும் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
இதனிடையே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், மோகன் உள்ளிட்ட 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இவர்களது உடல்களை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கதறி அழுதனர். இதனால் வி.புதுப்பாளையம் கிராமமே அழுகுரலால் பெரும் சோகத்தில் மூழ்கியது.
கடன் சுமை தாங்க முடியாமல் தச்சு தொழிலாளி தனது 3 குழந்தைகளை கொன்று விட்டு மனைவியுடன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.