கூடலூர் பகுதியில் எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை தொடங்கியது

கூடலூர் பகுதியில் எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை தொடங்கி உள்ளது.

Update: 2020-12-15 01:59 GMT
கூடலூர், 

நீலகிரி மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என கூடலூர் அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் பல நூறு ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அடுக்கை, மர நெல், கந்தசால், பாரதி, சீரகபாலை, வெளும் பாலை உள்பட பாரம்பரிய நெல் ரகங்களை பல தலைமுறைகளாக இப்பகுதியில் வாழும் மக்கள் பயிரிட்டு வருகின்றனர்.

நெற்கதிர்கள் விளைய தொடங்கியதும், பூ பூத்தரி என நெல் அறுவடை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக மேளதாளங்கள் முழங்க வயலில் சிறப்பு பூஜை செய்த பின்னர், குறிப்பிட்ட அளவில் நெற்கதிர்களை அறுவடை செய்து குல தெய்வ கோவில்களில் படையலிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக இந்த பண்டிகையை விவசாயிகள் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

அறுவடை தொடங்கியது

இந்த நிலையில் கூடலூர், தேவர்சோலை, அம்பலமூலா மற்றும் ஸ்ரீ மதுரை, முதுமலை ஊராட்சிகளில் பயிரிட்டுள்ள நெற்கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரானது. தற்போது கூடலூர் பகுதியில் இரவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

தற்போது நெற்கதிர்களை அறுவடை செய்ய ஆட்கள் கிடைப்பது இல்லை. இதனால் நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஒரு ஏக்கர் பரப்பளவில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய 15 தொழிலாளர்கள் தேவைப்படும். ஒரு தொழிலாளருக்கு ரூ.300 வரை கூலி கொடுக்க வேண்டும். பின்னர் அறுவடை செய்த கதிர்களை களத்தில் போட்டு அடிப்பதற்கு ஒருவருக்கு ரூ.1000 வரை கூலி கொடுக்க வேண்டும். இதனால் கட்டுப்படி ஆவது இல்லை. தற்போது தொழிலாளர் பற்றாக்குறையும் நிலவுகிறது.

இதனால் நவீன எந்திரங்களை வரவழைத்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்படுகிறது. எந்திரம் மூலம் ஒரு ஏக்கரில் 2 மணி நேரத்தில் அறுவடை செய்யலாம். வைக்கோல், நெல் என தனித்தனியாக எந்திரம் பிரித்து விடுகிறது. இதனால் அறுவடை பணியும் விரைவாக நடைபெறுகிறது. மேலும் எந்திர பயன்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.3 ஆயிரம் வரை மட்டுமே செலவாகிறது. இதனால் நெல் அறுவடைக்கு எந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகி விட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்