ரூ.627 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா: எடப்பாடி பழனிசாமி நாளை காலை கரூர் வருகை
கரூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை வருகை தருகிறார். இதையடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் தீவிரம் காட்டி உள்ளனர்.
கரூர்,
கரூரில் நாளை காலை (புதன்கிழமை) பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலைசேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு நாமக்கல் வழியாக கரூர் வந்தடைகிறார்.
பின்னர் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுசுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தொழில்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பாக ரூ.627 கோடி மதிப்பிலான 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
28 முடிவுற்ற பணிகள்
பி்ன்னர் பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, பொதுசுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.118.53 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்
பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில்மையம், தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
கலந்தாய்வு
பின்னர், குறு, சிறு நடுத்தரத் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதையடுத்து மேற்கண்ட நிகழ்ச்சிகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடித்து விட்டு நாளை மதியம் 3 மணிக்கு கரூரில் இருந்து கார் மூலமாக சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.
வரவேற்பு
முன்னதாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், வேலாயுதம்பாளையம், வெங்கமேடு, பஸ்நிலையம் ரவுண்டானா, லைட்-ஹவுஸ் கார்னர், தாந்தோணிமலை, கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழாவிற்காக கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பந்தல் அமைப்பது மற்றும் முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடக்கிறது.