கர்நாடகத்தில் கணவனால் பெண்களுக்கு வன்கொடுமை அதிகரிப்பு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

கர்நாடகத்தில் கணவனால் பெண்களுக்கு வன்கொடுமை அதிகரித்து இருப்பதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-12-14 21:58 GMT
பெங்களூரு, 

மனைவிகள் மீது கணவன்கள் வன்கொடுமை நிகழ்த்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது போன்ற வன்கொடுமைகள் நிகழ்வதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவது மட்டும் தடுக்க முடியவில்லை. கர்நாடகாவில் 2019-20-ம் ஆண்டில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் சதவிகித அடிப்படையில் மனைவிகளை கணவன்கள் தாக்கியது தொடர்பான வழக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது இதுபோன்ற சம்பவங்கள் 115 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது கடந்த 2018-19-ம் ஆண்டை விட அதிகம் என்று தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல வாரியம் வெளியிட்டுள்ள 5-வது சுற்று ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கணவன்களால் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லைக்கு 18 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவம் கர்நாடகத்தில் 100 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. இதில் குறிப்பிடும்படியாக ஆபாச படம் பார்க்கும்படியும், பாலியல் துன்புறுத்தல்களும் கணவன்களால் பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 18 வயது முதல் 49 வயது வரையிலான பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்வது 44.4 சதவிகிதமாக உள்ளது.

கர்நாடகாவில் பல்வேறு வகைகளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். கர்நாடகத்தில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வதன் எண்ணிக்கை 2019-20-ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. கர்நாடகாவை விட மராட்டியத்தில் இது போன்ற பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்