போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு - 14 ஆயிரத்து 465 பேர் எழுதினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 14 ஆயிரத்து 465 பேர் எழுதினர்.

Update: 2020-12-14 07:09 GMT
தூத்துக்குடி,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 ஆயிரத்து 134 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 13 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வினை 11 ஆயிரத்து 816 ஆண்கள், 2 ஆயிரத்து 649 பெண்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 465 பேர் எழுதினர். மாவட்டத்தில் 1,669 பேர் தேர்வு எழுதவில்லை.

விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட் கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைவரும் முக கவசம் அணிந்து வந்தனர். தேர்வுமைய நுழைவுவாயிலில் தேர்வர்கள் அனைவரும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த தேர்வை சிறப்பு மேற்பார்வை அதிகாரியான ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயகவுரி தலைமையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் கண்காணித்தனர். மேலும் தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்