நாகர்கோவிலில் சிறுமியை கடத்திய காதலன் போக்சோ சட்டத்தில் கைது

நாகர்கோவிலில் இருந்து நண்பர் உதவியுடன் சிறுமியை கடத்தி சென்ற காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியின் நகைகளை அடகு வைத்து செலவு செய்தது அம்பலமாகி உள்ளது.

Update: 2020-12-14 05:37 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் மாயமானார். இது குறித்து அவருடைய பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மாயமான சிறுமிக்கும், கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த விஜய் என்பவருக்கும் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இவர்களுடன் முகநூலில் சிவக்குமார் என்பவரும் நண்பராக இணைந்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியை அவருடைய காதலனுடன் சேர்த்து வைக்க சிவக்குமார் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு அழைத்து சென்றார். திருச்சி பைபாஸ் ரோட்டில் விஜய்யிடம் சிறுமியை ஒப்படைத்து விட்டு மீண்டும் ஊர் திரும்பினார்.

மருத்துவ பரிசோதனை

அதன்பிறகு விஜய்யும், சிறுமியும் சென்னை சென்றனர். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த அவர்கள் நேற்று முன்தினம் நாகர்கோவில் வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உடனே விஜய்யை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விஜய்யிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 2 பேரும் சென்னையில் தங்கி இருந்த போது சிறுமியின் நகைகளை அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தை செலவு செய்ததும், விஜய்க்கு வேலை எதுவும் கிடைக்காததால் மீண்டும் ஊருக்கு வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியை கடத்திய விஜய்யை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்